எலுமிச்சை பராமரிப்பு




செம்மண் செம்மண் சரளை மணல் 
வகையான நிலங்களில் எலுமிச்சை வளர்ப்போர் கவனத்திற்கு

இனிவரும் வரட்சியான காலங்களில் எலுமிச்சையை பாதுகாக்க அல்லது நிலையான மகசூல் எடுக்க கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கலாம்.

குறைந்த பாசன நீரில் எலுமிச்சையை வளர்க்க ஒவ்வொரு எலுமிச்சை செடியின் வட்ட பாத்தியில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 சட்டி வண்டல் மண் அல்லது கரம்பை மண் கொட்டி, முறையாக பரப்பி, தண்ணீர் தெளித்து , ஈரப்பதத்தை பின்பு பாசனம் செய்யவும்.

இவ்வாறு மண் பரப்பிய நிலங்களில் உள்ள எலுமிச்சைக்கு பாசனம் செய்யும் நாட்களில் 10 லிட்டர் தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும். அதையும் காலையில் 9 மணிக்கு முன்பு 5 லிட்டர் மாலையில் 4 மணிக்குப் பின்பு 5 லிட்டர் என பிரித்து கொடுக்கலாம்.

குறைந்த தண்ணீர் கொடுத்தால் மட்டுமே எலுமிச்சை முறையாக பூத்துக் காய்க்கும். மண்ணில் ஈரம் திரும்ப தேவைப்படும் நேரத்தில் மீண்டும் பாசனம் கொடுக்கலாம்.

 எலுமிச்சைக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை எருக்கு கரைசல் மரத்திற்கு 2 லிட்டர் என தரைவழி கொடுக்கலாம். மாதம் ஒரு முறை 10 லிட்டர் அளவுள்ள கரைசலை இலைகளின் முன்னும் பின்னும் நன்கு நனையுமாறு தெளிக்கலாம்.

கோடை காலத்தில் எலுமிச்சையை தாக்கும் தண்டு துளைப்பான் மற்றும் புழுக்களிலிருந்து செடியை காப்பாற்ற பத்து லிட்டருக்கு 30 மில்லி வேப்பெண்ணையை கரைத்து பாலாக்கி 5 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிப்பது நல்லது.வாய்ப்பு கிடைத்தால் வேப்பெண்ணைக்கு பதில் 5 இலை கசாயம் அல்லது அக்னி அஸ்திரம் அல்லது கற்பூரகரைசல் கொடுக்கலாம்.

மாதம் இருமுறை இயற்கை இடுபொருட்கள் தர வேண்டும். முக்கியமாக ஒவ்வொரு முறையும் மீன் அமிலம் (ஏக்கருக்கு 500 மில்லி) அல்லது பஞ்சகாவியா (ஏக்கருக்கு ஒரு லிட்டர்) அல்லது இஎம் கரைசல் அல்லது ஜீவாமிர்தம் (ஏக்கருக்கு 100 லிட்டர்) தரைவழி தரவேண்டும்.

கோடை காலங்களில் கவாத்து பண்ணக்கூடாது. செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பண்ணலாம்.

பூ எடுக்க வேண்டிய தேவை உள்ளவர்கள் பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் அல்லது மோர் கரைசலை 10 லிட்டர் அரை லிட்டர் என கலந்து எட்டு நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவேண்டும். மாலையில் தெளிப்பது அல்லது உன் காலை 9 மணிக்கு முன்பு தெளிப்பது நல்லது.

காய்களை பறிக்கும் 10 நாட்களுக்கு முன்பு திராட்சைப் பழ கரைசலை தெறித்து விடுவது நல்லது.

உயிர் உரங்கள் கொடுப்பதாக இருந்தால் ஒரு மரத்திற்கு 100 கிராம் அசோஸ்பைரில்லம் 50 கிராம் பாஸ்போபாக்டீரியா கொடுக்கலாம். காய்த்துக் கொண்டிருக்கும் மரம் என்றால் 100 கிராம் பாஸ்போபாக்டீரியா மற்றும் 200 கிராம் அளவுள்ள அடுப்பு சாம்பலில் இருந்து இரண்டு அடி தள்ளி தரையில் இட்டு மூடி தண்ணீர் பாய்ச்சலாம்.

எந்த ஒரு நோய் அல்லது பூச்சி எதிர்ப்பிற்காக பயிர் பாதுகாப்பு முறைகள் இயற்கை வழி தீர்வோ(வேப்பெண்ணெய் கரைசல்) அல்லது உயிர்வழி தீர்வு (வெர்திசீலியம் லக்கானி, பேவெரியா பேசியானா) செய்யும்போது ஆறு நாள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும்.

பழங்களில் ஏற்படும் பழுப்பு நிற சொரி போன்ற கறைகளை களை தவிர்க்க ஏக்கருக்கு பத்து எண்ணிக்கையில் கருவாட்டு பொறியை மரத்தின் பாதி உயரத்தில் தொங்க விடலாம்.

மாதம் ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சுண்ணாம்பு தூளை கலந்து 6 மணி நேரம் ஊற வைத்து பின்பு வடிகட்டி ஒவ்வொரு ஊரிலும் ஒரு லிட்டர் என கொடுக்கலாம்.