அசோஸ்பைரில்லம்

உயிர் உரங்கள்

தாவரங்களுக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து , சாம்பல் சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை மண்ணில் இருந்து மற்றும் வளிமண்டலத்திலிருந்து கிரகித்து தாவரங்களுக்கு வளர்ச்சிக்கு உகந்த வடிவில் தர நுண்ணுயிர்கள் மிக தேவை. எல்லா தாவரங்களும் தனக்கு தேவையான சத்துக்களை நுண்ணுயிர்கள் மூலம் அதன் வேர் மூலம் மண்ணில் இருந்தும், சுற்றியுள்ள சூழலிருந்தும் எடுத்துக்கொள்ளும். ஆனால் நாம் மண்ணில் இட்ட நஞ்சுகளும், உப்பும் நிலத்தின் வளத்தினை கெடுத்து பயிர்களுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் நுண்ணுயிர்கள் வாழும் சூழலை அழித்துவிட்டது. அதனால் இயற்கை வேளாண்மைக்கு திரும்பும் நாம் மண்ணை வளமாக்கும் நோக்கத்துடனும் மீண்டும் வேதிப்பொருள் பயன்படுவதை நிறுத்தும் வகையிலும் நுண்ணுயிர்களை உரங்களாகப் பயன்படுத்துவது அவசியமாகிறது.


அவ்வாறு பயிர்களுக்கு தேவையான பலவித நன்மை செய்யும் நுண்ணுயிர்களை கண்டறிந்து அவற்றை சேகரித்து, அவை வாழும் சூழ்நிலையை செயற்கையாக உருவாக்கி பவுடர் வடிவில் பாலித்தின் பைகளிலும், திரவ வடிவில் ப்ளாஸ்டிக் குப்பியிலும் அடைத்து விநியோகிக்கப்படும் உரங்கள் உயிர் உரங்கள் எனப்படும்.


சில முக்கிய உயிர் உரங்களைப் பற்றி விரிவாக காண்போம்.

1. அசோஸ்பைரில்லம்:

     உயிர் உரங்களில் அதிக அளவு ஆராய்ச்சி மேற்கொள்ள பட்ட பாக்ட்டீரியா வகையைச் சார்ந்த நுண்னுயிரி அசோஸ்பைரில்லம் ஆகும். வாயு மண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் என்னும் வாயுவை ஈர்த்து பயிர்களுக்கு கொடுக்கிறது. இதனால் பயிர்களுக்கு சிபாரிசு செய்யப்படும் தழைச்சத்து அளவில் 20 முதல் 40 சதவீதம் வரை குறைத்துக்கொள்ள முடியும். இந்த வகை நுண்ணுயிரானது பயிர் வளர்ச்சிக்கு தேவையான சில வளர்ச்சி ஊக்கியையும் உற்பத்தி செய்கிறது. மகசூலை அதிகரிப்பதுடன், வறட்சியைத் தாங்கும் திறனையும் சில பயிர்களுக்கு கொடுக்கிறது. மேலும் இவைகள் அழிந்தவுடன் மண்ணில் மக்கி, பயிர்களுக்கு உரமாகவும், மண்ணின் வளத்தைக் காக்கவும் உதவுகிறது.அசோஸ்பைரில்லத்தின் வகைகள்:

அசோஸ்பைரில்லத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.அவை


1. அசோஸ்பைரில்லம் பிரேசிலன்சி - இது தானிய மற்றும் காய்கறிச் செடிகளில் செயலாற்றும்.

2. அசோஸ்பைரில்லம் ரைப்போரெம் - இது நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய பயிர்களில் செயலாற்றுகிறது.

பொதுவாக வேளாண் துறை அலுவலகங்களிலl மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு அசோஸ்பைரில்லம் என்ற பெயரிலேயே விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 

பயன்படுத்தும் முறை :

நேரடியாக விதைக்கும் பயிர்களுக்கு முளைப்புத் திறனை அதிகரிக்க அசோஸ்பைரில்லம் பவுடராக நனைத்து அவசியம் விதை நேர்த்தி செய்யலாம். நாற்றுவிட்டு நடும் பயிர்களுக்கு நாற்றுக்களின் வேர்களை நனைத்து நடலாம். இதனால் ஆரம்பகால வளர்ச்சி உறுதி செய்யப்படும்.


விதை நேர்த்தி செய்யும் முறை:

1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் பவுடருடன், தேவையான அளவு ஆறிய அரிசிக் கஞ்சியுடன், பவுடராக இருந்தால் இரண்டு பாக்கெட்(1 பாக்கெட் -200கிராம்) அல்லது 100 மில்லி திரவ அசோஸ்பைரில்லத்தை கலந்து கலவை தயார் செய்ய வேண்டும். இந்த கலவையில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை இட்டு, விதைகளின் மேல் முழுதாக படும்படி கலக்கிவிட்டு, 30 நிமிடம் நிழலில் உலற வைத்துப் பின் விதைக்கலாம்.


நாற்றுக்களின் வேர் நேர்த்தி :

10 லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் அல்லது 100 மில்லி அசோஸ்பைரில்லத்தை 10 மில்லி கிராம் சூடோமோனாஸ் கூட நன்கு கலந்து கரைசல் தயார் செய்ய வேண்டும். நாற்றுக்களின் வேர்களை சுமார் 30 நிமிடங்கள் வேர் பாகத்தை நன்கு மூழ்க வைத்து பின்பு நடவு செய்தல் வேண்டும்.


நாற்றாங்காலில் இடுதல் :

ஒரு ஏக்கருக்கு 1 கிலோ ( 5 எண்கள் X 200 கிராம்/ பாக்கெட்) அல்லது 400 மில்லி திரவ அசோஸ் பைரில்லத்தை 10கிலோ தொழு உரத்துடன் கலந்து தூவவும்.


வளர்ந்த பயிர்களுக்கு இடுதல் :

நெற்பயிருக்கு 1 ஏக்கருக்கு - பவுடராக இருந்தால் 4 கிலோ, திரவமாக இருந்தால் 2 லிட்டர் அசோஸ்பைரில்லத்தை 100 லிட்டர் தண்ணீர்ல் கலந்து தரைவழி முதல் இரண்டு மாதங்களுக்கு தரவேண்டும். பத்து லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி திரவ வடிவிலான அசோஸ்பைரில்லதை மாலை வேளையில் தெளிக்கலாம். மஞ்சள் கரும்பு போன்ற பயிர்களுக்கும் இவ்வாறு கொடுக்கலாம்.


தோட்டக்கலைப் பயிர்களுக்கு

முதல் வருட பயிருக்கு பயிருக்கு ஒரு மாதத்திற்கு 50 கிராம் முதல் 100 கிராம் வரை மாலை வேளையில் தண்ணீருடன் கலந்து ஊற்றி விடலாம். 

2 வயதான மரங்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு மரத்திற்கு 100 கிராம் முதல் 200 கிராம் பவுடராக உள்ள அசோஸ்பைரில்லதை தண்ணீருடன் கலந்து 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து கொடுப்பது நல்லது.

மானாவாரி பயிர்களுக்கு பத்து லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி அல்லது 300 கிராம் அளவுள்ள பவுடரை கலந்து மாலை வேளையில் இலைகள் நனையுமாறு வேரில் இறங்குமாறு தெளிக்கலாம்.

மண் ஈரமாக இருக்கும் பொழுது பவுடர் வடிவிலான 4 கிலோ அசோஸ்பைரில்லத்தை மணலில் கலந்து தூவலாம்.     

உயிர் உரங்கள் பயன்பாட்டில் கவனிக்க வேண்டியவை;

1. உயிர் உரங்களில் விதை நேர்த்தி செய்த பின் எந்த வித பூச்சி மருந்துகள் மற்றும் செயற்கை உரங்களை இடக் கூடாது.

2. உயிர் உரங்களை சூரிய ஒளி மற்றும் ஈரப்பதம் , வெப்பமுள்ள இடங்களில் சேர்த்து வைக்க கூடாது.

3. உயிர் உரங்களை மண்ணில் இடும்போது ஓரளவு ஈரப்பதம் மண்ணில் இருப்பது நல்ல பலனைத் தரும். அதேபோல் தெளிக்கும் போதும் மற்றும் பாசன நீரோடு கலந்து விடும் போதும் மாலை வேளையாக இருந்தால் நல்ல பலனளிக்கும்.


4. பவுடராக இருந்தால் ஒரு பாக்கெட் திறந்த பின்பு மீதம் இருந்தாலும் நன்கு மூடி வைத்துக் கொள்ளலாம். திரவ வடிவில் இருக்கும் போது முடிந்தவரை மூடியைத் திறந்த பின்பு முழுமையாக வயலில் கொடுத்து விடுவது நல்லது. மீதம் வைக்க வேண்டாம்.


YouTube Video Link : 

https://youtu.be/PBRlfa6b-Ek