தேவையான பொருட்கள்
1. மீன் கழிவு - 2 கிலோ
2. நாட்டுச் சர்க்கரை -2 கிலோ
3. மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளி / டிரம் -1
தயாரிக்கும் முறை
காற்றுப் புகாமல் மூடி அமைப்புடைய பிளாஸ்டிக் வாளியில் முதல் அடுக்கில் சர்க்கரை அடுத்து மீன் கழிவு சிறிதளவு,பின் நாட்டு சர்க்கரை - மீன் கழிவு என்று சிறிது சிறிதாக போட்டு சுத்தமான வெடிப்பு மற்றும் பிளவு இல்லாத மரக்குச்சியைக் கொண்டு நன்கு கலந்து கூழ் அமைப்பாகும்படி கலக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்த பின்பு காற்றுப்புகாதவாறு நன்கு இறுக்கமாக மூடி விட வேண்டும். வெயில் படாத இடத்தில் பாதுகாப்பாக நாய், எலி, பெருச்சாளி போன்ற உயிரினங்களால் பாதிப்பு ஏற்படாதவாறு வைக்க வேண்டும்.
மீன் அமிலம் 22 நாட்களில் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் அளவுகள்
தெளிப்பு - 30 மி.லி / 10 லி தண்ணீர்
நாற்றுபருவ பயிர்களுக்கு 30-50மி.லி/10 லி தண்ணீர்
வளர்சியடைந்த பயிர்கள் 50 -150மி.லி/ 10 லி தண்ணீர்
பழமரம் மற்றும் மரப்பயிர்களுக்கு -150 300மி.லி
பாசனம் - 1 ஏக்கருக்கு 500 மி.லி - 2 லிட்டர் வரை பயன்படுத்தலாம்
மேம்படுத்தப்பட்ட மீன் அமிலம்
மேற்குறித்த அளவுடைய பொருட்களுடன் 500 கிராம் அளவுள்ள விதை நீக்கிய பேரீச்சம் பழம் அல்லது நன்கு கனிந்த வாழைப்பழம் 500கிராம் கலந்து தயார் செய்யும் போது கூடுதலாக நுண்சத்துகள் மற்றும் இரும்புச்சத்து அதிகரிக்கும்.
பயன்கள்
அனைத்து வகையான பயிர்களுக்கும் மீன் அமிலம் இடுபொருளாக தரலாம். மீன் அமிலம் பாசனம் வழியே கொடுத்துவர மண்ணில் தழைச்சத்து உட்பட அனைத்து விதமான சத்துகளும் அதிகரிக்கும்.
மீன் அமிலம் பயிர்களின் மீது தெளிக்கும் போது சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும், தழைச்சத்துடன் நுண்ணூட்டச் சத்துகளை நிலை நிறுத்திடவும் பயன்படுகிறது.
மீன் அமிலம் தெளிப்பதற்கு பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பின்பற்றவும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்
மீன் கழிவுகள் எவ்வளவு நேரத்தில் அமிலம் தயாரிக்க பயன்படுத்தப்பட வேண்டும்?
மீன் உடலில் தேவையற்ற பாகங்களான குடல், தலை பாகங்களை வெட்டப்பட்ட 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்துவது நல்லது, கடைகளில் அதிக நேரம் கழித்து வாங்கும் பொழுது புழுக்கள் மற்றும் ஈக்கள் முட்டை வைத்துவிட வாய்ப்பாக அமையலாம். இதனால் மீன் அமிலம் செயல்திறன் குறைந்துவிடும்.
மீன் சந்தை தொலைவில் இருந்தால் சிறிதளவு நாட்டு சர்க்கரையை கொண்டு சென்று அதனுடன் கலந்து கொண்டு வந்து பின் முழுமையாக தயார் செய்யலாம்.
மீன் அமிலம் தயாரிக்கும் போது டிரம் வெடிக்குமா?
மீன் அமிலம் தயாரிக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் வாய்ப்பகுதி அளவிற்கு நிறைத்து சர்க்கரை மற்றும் மீன் கழிவுகளை இட்டு நிரப்பக் கூடாது. கால் பங்கு அளவிற்கு காலி இடம் இருக்க வேண்டும். மீன் அமிலம் தயாராகும் போது வாயுக்கள் உற்பத்தியாகும், இவ்வாய்வுக் களுக்கு இடம் இல்லாமல் போகும் பொழுது சமயத்தில் மூடி திறந்து கொள்ள நேரிடும்.
குறைந்த தடிமனுடைய பிளாஸ்டிக் டப்பாவில் தயார் செய்யும் போது 2 ஆம் நாளில் உப்பி, வெடித்து விடும் நிலை காணப்பட்டால் மட்டும் மூடியை முழுதும் திறக்காமல் இலேசாக திறந்து வாயுக்கள் வெளியேறிய பின் இறுக்கமாக மூடி விடவும். மெல்லிய தடிமனுடைய பிளாஸ்டிக் கலன்களில் தயார் செய்வதை தவிர்க்கவும்.
மீன் அமிலம் தயாரான பின் மேலே வெள்ளை நிறத்தில் பூஞ்சானம் படிந்திருந்தால் பயன்படுத்தலாமா?
மேலே உள்ள பகுதியை நீக்கி விட்டு கழிவுகளை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.
மீன் கழிவு தயாரானவுடன் உடனடியாக வடித்து எடுத்து பயன்படுத்த வேண்டுமா?
22 நாட்களில் மீன் கழிவுகளும் சர்க்கரையும் நொதித்த லுக்கு உட்பட்டு கெட்டியான திரவம் போன்று தயாராகி இருக்கும். இதனை வடிகட்டி கொண்டு வடித்து எடுத்து சிறிய 2 லி அளவுள்ள கேன்களில் சேமித்து வைக்கலாம். கேனில் குறைந்த அளவில் 15% அளவு வாயுக்களுக்காக காலியிடம் இருக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட மீன் அமிலத்தின் செயல் திறன் 6 மாதங்கள் மிக சிறப்பாக இருக்கும்.
கரும்புச்சாறு பயன்படுத்தலாமா?
கரும்புச்சாறு பயன்படுத்தக் கூடாது. நாட்டு சர்க்கரை, அழுக்கு நீக்கம் செய்யப்படாத மண்டை வெல்லம் மற்றும் கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தும் போது மட்டுமே மீனின் உடல் பாகங்களை சிதைத்து ஒரு தரமான மீன் அமிலம் கிடைக்கும்.
முக்கிய குறிப்பு
மீன் அமிலம் தயாரிக்கும் பொழுது 22 நாட்களுக்கு பதிலாக 40 முதல் 60 நாட்கள் வரை மூடியை திறக்காமல் அப்படியே வைத்திருந்து பின் பயன்படுத்தும் பொழுது மீன்களின் உடலில் உள்ள சிறிய அளவிலான முட்கள், எலும்புகள் நன்கு நொதித்தலுக்கு உட்பட்டு கால்சியம் சத்துகள் கிடைப்பதுடன், உடலின் அனைத்து பாகங்களும் நன்கு மட்கி முழுமையான செயல்திறன்மிக்க மீன் அமிலம் கிடைக்க வாய்ப்பாக அமைகிறது.
மீன் அமிலம் முழுமையாக தயாராகும் கால அளவிற்கு இடையே மூடியை திறக்கும் பொழுது கொள்கலன்களில் காற்றில்லா நிலையில் உயிர் வாழும் பாக்டீரியாக்கள் ஐந்து நொடிகளில் உயிரிழந்து விடும். இதனால் மீன் அமிலம் தயாராகும் காலம் தள்ளிப் போவதுடன் மீண்டும் காற்றில்லா நிலையில் வாழும் பாக்டீரியாக்கள் தனது வேலையை முதல் நிலையில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு உட்படும். இதோடு மீன் அமிலத்தின் செயல்திறன் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.
இயற்கை விவசாயத்தின் முதல் குறிக்கோள் குறைந்த செலவில் எதிர்பார்க்கும் அதிகப்படியான இலாபத்தை நோக்கியே இருக்க வேண்டும்.
உதாரணமாக
நாட்டு சர்க்கரை (கழிவு) - ₹50
அழுக்கு நீக்கம் செய்யப்படாத மண்டை வெல்லம் - ₹ 35
கருப்பட்டி -₹ 300 முதல் ₹ 450 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது.
எனவே நாம் இடுபொருள்களின் செயல் திறன் குறைவு ஏற்படாத வண்ணம் இரசாயன கலப்பில்லாத பொருட்களை குறைந்த செலவில் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
YouTube Video Link
மீன் அமிலம் முக்கிய நுட்பங்கள்
மீன் அமிலத்தில் புழுக்கள்