தாவர இலைக்கரைசல்கள்

 இயற்கை பூச்சி கொல்லிகள்

1. தாவரப் பூச்சிக் கொல்லிகள்:

தாவரப் பூச்சிக் கொல்லிகள் கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களான

ஆடாதோடா,

நொச்சி,எருக்கு,

வேம்பு,

சோற்றுக் கற்றாழை,

எட்டிக் கொட்டை

போன்றவற்றைக் கொண்டு, வேக வைக்கும் முறையிலும், ஊறல் முறையிலும் தயாரிக்கப்படுகின்றன.

ஊறல் முறை:

நொச்சி,

ஆடாதோடா,

வேம்பு,

எருக்கன்,

பீச்சங்கு (உண்ணி முள்),

போன்றவற்றின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் மாட்டு சிறுநீர், 3 லிட்டர் சாணக் கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாள்கள் வரை ஊறவிட வேண்டும். இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும். இதில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.

வேக வைக்கும் முறை:

மேற்கண்ட இலைகள், எட்டிக் கொட்டை தலா 2 கிலோ எடுத்து பாத்திரத்தில் இட்டு,15 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் வேக வைக்க வேண்டும். வெந்தபின் சாற்றை வடித்து எடுக்கவேண்டும். ஆறியபின் அதில், ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் வடிசாற்றில், 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.


பூசண நோய் கட்டுப்பாட்டுக்கு:

மேற்கண்ட சாறில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் முதல் 1 கிலோ வரை கலந்து தெளிக்கலாம்.


2. நுண்ணுயிர் இலைக் கருகல் நோய்களுக்கு:

சோற்றுக் கற்றாழை 3.5 கிலோ,

இஞ்சி 200 கிராம்,

இவற்றுடன் புதினா அல்லது

சவுக்கு இலை

2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி கலந்து, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளிக்கலாம்.


3. இயற்கைத் தாவர பூச்சிக் கொல்லி மருந்து–வேப்பங்கொட்டை சாறு:

5 கிலோ வேப்பங் கொட்டையை உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி,10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினை பிழிந்து எடுத்து வடிகட்டி, 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.


4. இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி?

இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம்:

தேவையான பொருட்கள் :

பூண்டு – 300 கிராம்,

மண் எண்ணை 150 மிலி.

பூண்டை மண் எண்ணையில் 24 மணி நேரம் ஊற வைக்கவும் 60 லிட்டர் நீரில் சேர்த்து ஒரு ஏகர் நிலத்தில் பயன் படுத்தலாம்


5. இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி- பூண்டு -மிளகாய் கரைசல் செய்வது எப்படி?

பூண்டு 1 kg எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ள வேண்டும்).

இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6லிட்டர் கரைசல் தயார்.

இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.

இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை.இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.


6. பெருங்காயம் பூச்சிகளை கட்டு படுத்தும்:

ஒரு ஏகர் நிலத்திற்கு, ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்கு பையில் போட்டு நீர் பாசனம் இருக்கும் கால்வாயில் விட்டு வைத்தால், நீரில் பெருங்காயம் கரைந்து செடிகளுக்கு செல்கிறது.

இந்த முறையால், பயிர்கள் நன்றாக வளர்வது மட்டும் இல்லாமல், பூச்சிகளின் தாக்குதலும் குறைகிறது.


7. இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்

சிறியாநங்கை கஷhயம்3to5%,பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல் அல்லது 5 சதம் வேப்ப விதைக் கரைசலைத் தௌpத்து கட்டுப்படுத்தலாம்.

வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.

வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகியவற்றை 160 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தளிக்க வேண்டும்.


வேப்பங்கொட்டைத் தூளை 300_to_500 கிராம், 300 மில்லி மண்ணென்ணையில் 24 மணி நேரத்திற்கு ஊறவைத்து அந்த வடிநீரை 150 கிராம் காதி சோப்புடன் கலந்து காலை வேளையில் தௌpக்க வேண்டும்.

10 கிலோ வேப்ப இலையை விழுது போல் அரைத்து அதனை 1 லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை 30நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இரவு முழுவதும் ஆற வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலந்தை மரக்கிளையால் பிணைக்கப்பட்ட இலைகளை உரசி,மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம். இது போல சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம்.

4 சதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.

சோற்றுக் கற்றழை சாறை தெளிக்கலாம்.

சாம்பல் தூவலாம்.

300 மில்லி வேப்ப எண்ணெய்,300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்

விளக்கு பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.


8. பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்

வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன.

இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படுவதுடன் காலங்காலமாக மருத்துவம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்று விளங்குவதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாக, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இலை களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள்,தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை.

இப்பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன்மைகளை கொண்டுள்ளது.

இதேபோல் கொசு விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

வில்வ விதைகளில் இருந்து பெட்ரோலியம் ஈதரைப் பயன்படுத்தி எண்ணெய் பிரித்து எடுக்கப்பட்டது. இதனை ஆய்வகச் சூழலில் வனமர இலை உண்ணிகளுக்கு எதிராக பயன்படுத்திப் பார்த்ததில், சாதகமான விளைவுகள் காணப்பட்டன.

இவற்றின் ஆய்வுமுடிவுகள் மூலம் வில்வ விதைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எண்ணெய், தேக்கு நாற்றுகளைத் தாக்கி அழிக்கும் இலையுண்ணிகளுக்கு எதிராக செயல்படும் திறன்மிகுந்த உயிர்ம பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த வல்லது என கண்டறியப்பட்டது.

குறிப்பாக தேக்கு செடிகள் மற்றும் இள மரங்களைத் தாக்கும் இலையுண்ணி பெருத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடியது.நாற்றங்கால்களிலும் இளவயதுஉடைய மரங்களிலும் முற்றிலுமாக இலைகளைத் தின்றுவிடும் அபாயம் உள்ளது. இவை மரங்களைக் கொன்றுவிடுவதில்லை. மாறாக, மரத்தின் வளர்ச்சி விகிதத்தைக் கடுமையாக பாதிக்கிறது. இந்தியாவின் அனைத்து தேக்கு தோப்புகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை இவை. ஒரு ஆண்டில் எப்போது தாக்கும் என ஊகித்து அறிய இயலாதவை. எனவே இந்த இலையுண்ணிகளை கட்டுப்படுத்துவது மர சாகுபடியாளர்களுக்கு இருந்துவரும் மிகப்பெரிய சவாலாகும்.

9. அக்னி அஸ்திரம் – இயற்கை முறை பூச்சி கொல்லி:

தேவையான பொருட்கள் :

கோமியம் 20 கிலோ

புகையிலை 1 கிலோ

பச்சை மிளகாய் 2 கிலோ

வெள்ளைப்பூண்டு 1 கிலோ

வேப்பிலை 5 கிலோ

இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்)வைத்து  நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.


நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை வேடுகட்டி 2 நாட்கள் அப்படியே வைத்து விடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும்.


அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.


100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு பூச்சிகள் காணாமல் போய்விடும்.


10. நீம் அஸ்திரா: பூச்சி விரட்டி

தேவையான பொருட்கள் :

1. நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ

2. நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர்

3. வேப்பங்குச்சிகள் மற்றும்

4. வேப்ப இலை 10 கிலோ

இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.

இந்த கரைசலை எத்தனை நாட்கள் வைத்திருக்க முடியும்?

குறைந்த பட்சம் அறுபது நாட்கள் வைத்திருக்கலாம்


11. சுக்கு அஸ்திரா: பூஞ்சாணக் கொல்லி

தேவையான பொருட்கள் :

1.     சுக்குத்தூள் 200 கிராம்

2.     பசு அல்லது எருமைப்பால் 5 லிட்ட

சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கு ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்


12. பிரம்மாஸ்திரம் :  அசுவனி   பூச்சி விரட்டி

தேவையான பொருட்கள் 

1.     நொச்சி இலை 10 கிலோ

2.     வேப்பம் இலை 3 கி

3.     புளியம் இலை 2 கிலோ

4.     கோமியம்   10 லிட்ட

 இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும். 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1ஏக்கருக்கு தெளிக்கலாம்

மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம். அசுவனி போன்ற பூச்சிகள் அண்டாது


13.பீஜாமிர்தம்: வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு  நோய்கள் தடுக்

தேவையான பொருட்கள்

1.     பசு மாட்டு சாணி 5  கிலோ

2.     கோமியம் 5 லிட்டர்

3.     சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்

4.     மண் ஒரு கைப்பிடி அளவு

5.     தண்ணீர் 20 லிட்டர்

இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்

விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்

பயன்கள் 

வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு  நோய்கள் தடுக்கப்படும்.


14. வேம்பு புங்கன் கரைசல்: பூச்சி விரட்டி

தேவையான பொருட்கள் :-

1.     வேப்பெண்ணை – ஒரு லிட்டர்

2.     புங்கன் எண்ணை – ஒரு லிட்டர்

3.     கோமியம் (பழையது) –  பத்து லிட்டர்

4.     காதி சோப்பு கரைசல் – அரை லிட்டர்

இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி


15. மாவுப்பூச்சி அழிப்பது எப்படி

இயற்கை எதிரிப்பூச்சிகளாக பொறி வண்டு ஏக்கருக்கு 500 வண்டுகளை தோட்டத்தில் விடவேண்டு

வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவிகிதம் தெளிக்க வேண்டும்

பச்சை மிளகாய் 250 கிராம், இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுத்து 300 மிலியை 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும்.