வீடுகளின் சுவற்றுக்கும் வீட்டிற்கும் இடையிலான பகுதியில் நம் வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறு அல்லது கிணற்றிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் 2அடி அகலம் 4 அடி நீளம் 4 அடி ஆழம் கொண்ட குழி எடுக்கலாம். இக்குழி மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கும் நான்கு இன்ச் பைப் தரையைத் தொடும் இடத்தில் மழை நீர் தொட்டிக்குள் இறங்கும் வகையில் அமைக்கலாம். மொட்டை மாடியில் மீதமுள்ள பைப்பு துவாரங்களை பிளாஸ்டிக் பைகள் கொண்டு மூடி அடைத்து விடலாம்
பின்பு தோண்டப்பட்ட நான்கடி ஆழகுழியில் மூன்றடி உயரத்திற்கு உடை கல், கிடா கல் எனப்படும் குறைந்த விலை பாறை கற்களை கொண்டு நிரப்பி விடலாம். அதன் மேல் அரை அடி உயரத்திற்கு பேபி சிப்ஸ் எனப்படும் 3 மில்லி மீட்டர் அளவுள்ள ஜல்லி அல்லது முக்கால் ஜல்லி போட்டுவிடலாம். மீதமுள்ள அரை அடியில் குழியின் ஓரங்களில் செங்கல் வைத்து அடுக்கி விடலாம். இக் குழியை கடப்பாக்கல் அல்லது சிமெண்ட் ஸ்லாப் எனப்படும் மூடிக்கொண்டு மூடிவிடலாம். இதனால் இக்குழி மீது நடக்க முடியும். உபயோகப்படுத்தும் வகையிலும் இருக்கும்.
இந்தக் குழியில் மழை நீர் விழும் போது பூமிக்குள் பல அடுக்குகளும் நனைந்து அதன் ஈரம் பாறை இடுக்குகளுக்கு இடையே உள்ள துவாரம் மூலமாக ஆழ்துளை கிணற்றுக்குள் செல்லும் வகையில் அமையும். இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பில் மழை நீர் விழும் போது புவியீர்ப்பு விசையின் மூலமாக நீரின் போக்கு கீழ்நோக்கி அல்லது பக்கவாட்டில் இருக்கும். இதனால் கட்டிடத்தின் அஸ்திவாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த எளிமையான மழை நீர் சேகரிப்பு அமைப்பால் கோடை காலத்தில் கிடைக்கும் மழை நீர் பூமிக்குள் செல்வதற்கு வழிவகை ஏற்படுவதுடன் சேகரிக்கப்பட்டு ஆழ்துளை கிணறு தொடர்ந்து நீர் வழங்கும் வகையில் செயல்படும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:
பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர்
9944450552
